நகர் நீங்கு படலம் - 1929
இராமன் முதலியோர் தேர்மிசைப் போதல்
மூவரும் தேர் ஏறிச் சேறல்
1929.
அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,
தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்
பொன்னும், தானும், ஓர் தேர்மிசைப் போயினான்.
அன்ன தாயர் - அத்தகைய தாய்மார்கள்; அரிதின் - சிரமப்பட்டு;
பிரிந்த பின் - பிரிந்து சென்ற பிறகு; முன்னர் நின்ற முனிவனைக்
கைதொழா -முன்னே நின்ற வசிட்ட முனிவனைக் கைகூட்பி வணங்கி;
தன்னது ஆர் உயிர்த் தம்பியும்- தன்னுடைய அரிய உயிர் போலச்
சிறந்த தம்பியாகிய இலக்குவனும்; தாமரைப்பொன்னும் - தாமரையில்
வீற்றிருக்கும் திருமகளாய சீதையும்; தானும் - ஓர்தேர்மிசைப்
போயினான் - ஒரு தேர்மேல் ஏறிச்சென்றான்.
தனது - தன்னது விரித்தல் விகாரம் எதுகை நோக்கியது. பொன் -
திருமகள், இங்கேசீதை. 234
