நகர் நீங்கு படலம் - 1911
கலிவிருத்தம்
1911.
‘பொன்னை உற்ற
பொலங் கழலோய்! புகழ் -
மன்னை உற்றது உண்டோ,
மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு’
என்று இயம்பினாள் -
மின்னை உற்ற
நடுக்கத்து மேனியாள்.
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் - மின்னலை ஒத்த
நடுங்குகின்ற உடம்பினைஉடையளாகிய சீதை; ‘பொன்னை உற்ற
பொலங்கழலோய்! - பொன்னால் செய்த பொலிவானவீரக்கழலை
அணிந்தவனே; புகழ் மன்னை - கீர்த்தி உடைய சக்கரவர்த்தியை;
உற்றது உண்டோ? - நேரிட்ட துன்பம் ஏதேனும் உளதோ; மற்று -
அப்படிஇல்லையாயின்; இவ் வன்துயர் உற்றது என்னை - இக் கொடிய
துன்பம் வந்தது எதனால்; இயம்பு - சொல்லுக;' என்று இயம்பினாள் -
என்று கேட்டாள்.
மாமியார் அழுதபடியால் சக்கரவர்த்திக்கு ஏதேனும் தீங்கண்டோ
என்று வினாவினாள்.மற்று, வினைமாற்று. 216
