நகர் நீங்கு படலம் - 1910
சீதை இராமனை நோக்கி வினவுதல் (1910-11)
1910.
எழுந்த நங்கையை, மாமியர்
தழுவினர்; ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப்
புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம்,
‘ஈது இன்னது’ என்று அறியாள்;
வழிந்த நீர் நெடுங் கண்ணினள்,
வள்ளலை நோக்கி,
எழுந்த நங்கையை - (கணவனை நோக்கி) எழுந்த சீதையை;
மாமியர் -; தழுவினர் - தழுவிக்கொண்டு; ஏங்கி - அவலித்து;
பொழிந்த உண்கண் நீர்ப்புதுப்புனல் ஆட்டி - சிந்திய மையுண்ட
கண்களிலிருந்து வரும் நீராகிய புதிய நீரில்நீராட்டி; புலம்ப - வருந்த;
அழிந்த சிந்தையள் அன்னம் - அதனால்கெட்டழிந்த மனம்
உடையளாய சீதை; ஈது இன்னது என்று அறியாள் - இதற்குக்காரணம்
இன்னது என்று அறியாதவளாய்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள் -
வழிகின்ற நீரினை உடைய நீண்ட கண்களோடு; வள்ளலை நோக்கி -
இராமனைப் பார்த்து,
இதுகாறும் அழுகையை அறியாதவர் அழுத கண்ணீராதலின்
‘புதுப்புனல்’ என்றார். இது குளகச்செய்யுள். 215
