நகர் நீங்கு படலம் - 1908
இராமன் சீதையின் உறையுளை அடைதல்
இராமன் சீதை இருக்குமிடம் சேறலும் அவள் திடுக்குறலும்
1908.
உயங்கி அந் நகர்
உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர்; வயின்வயின்
வரம்பு இலர் தொடர,
இயங்கு பல் உயிர்க்கு ஒர்
உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி
இருந்துழிச் சார்ந்தான்.
அந்நகர் - அந்த அயோத்தி நகரம்; உயங்கி - வாடி; உலைவுற-
வருந்த; ஒருங்கு - ஒருசேர; உழைச் சுற்றம் - ஏவல் செய்வோர்;
மயங்கிஏங்கினர் - அறிவு கலங்கி அழுது; வயின் வயின்- அங்கங்கே;
வரம்பிலர்தொடர - அநேகர் பின்பற்றி வர; இயங்கு பல் உயிர்க்கு
ஓர் உயிர் என நின்றஇராமன் - சஞ்சரிக்கின்ற பல உயிர்களையும்
உடலாகக் கொண்டு அவற்றுக்கு ஒப்பற்ற உயிராக இருக்கின்ற இராமன்;
தயங்கு - விளங்குகின்ற; பூண் முலைச் சானகி -அணிகலன் அணிந்த
தனங்களை உடைய சீதை; இருந்துழிச் சார்ந்தான் - இருந்த
அரண்மனையை அடைந்தான்.
உழைச் சுற்றம் அருகிருந்து வேலை செய்வோர். ‘உயிர்க்கு உயில் என
நின்ற இராமன்’என்பதனைத் திருமாலாகிய பரம்பொருள் தத்துவத்தில்
உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தும்தன்மையை நோக்கித் கூறியதாகவும்
கொள்ளலாம். 213
