நகர் நீங்கு படலம் - 1898
1898.
தார் ஒலி நீத்தன, புரவி; தண்ணுமை
வார் ஒலி நீத்தன, மழையின் விம்முறும்;
தேர் ஒலி நீத்தன, தெருவும் - தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலவே.
புரவி - குதிரைகள்; தார் ஒலி நீத்தன - கழுத்திற் கட்டிய
கிண்கிணிமாலையின் ஓசையைக் கையிட்டன; தண்ணுமை - மத்தளம்; வார்
ஒலி நீத்தன -வாரை இீழுத்துக் கட்டலால் விளையும் ஓசையைக்
கைவிட்டன; தெருவும் - வீதிகளும்; தெண்திரை நீர் ஒலி நீத்தன
நீத்தம் போல - தெளிந்த அலை நீர் ஒலியை விட்ட கடல் போல;
மழையின் - மேகம் போல; விம்முறும் தேர் ஒலி நீத்தன - ஒலிக்கின்ற
தேர்களின் ஒலியை இழந்தன.
குதிரை ஒட்டுவாரில்லை, மத்தளம் அடிப்பார் இலர், தெருவில்
தேர்கள் ஓடவில்லைஎன்றார். அலை ஒழிந்த கடல் தேரோசை இழந்த
தெருவுக்கு உவமை ஆயிற்று. ‘ஏ’ஈற்றசை. 203
