நகர் நீங்கு படலம் - 1896
1896.
ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;
துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்
தளி துறந்தன பரி; தான யானையும்
களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே.
உயிர் துறந்தென - உயிர் போனார் போல; முகம் -
எல்லோருடையமுகமும்; ஒளி துறந்தன - ஒளி மழுங்கின; முகில்
தொகையும் - மேகக்கூட்டமும்; துளி துறந்தன - மழைத் துளி
துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன-
தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன; தானயானையும் - மதப்
பெருக்கையுடைய யானைகளும்; மலர்க் கள் உண் வண்டின் - மலரில்
தேன் உண்ணும் வண்டைப் போல; களி துறந்தன - களித்தலைக் கை
விட்டன.
தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே
வண்டுகள் களிதுறந்தன என்றதால்இராமன் காடு ஏகும் துயரத்தால்
மலர்களில் தேன் இல்லையாயிற்று. 201
