நகர் நீங்கு படலம் - 1892
1892.
காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்,
தே மரு நறுங் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன - தவள மாடமே.
காமரம் கனிந்து என - காமரம் என்னும் பண் முற்றிப்
பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி - இனிய மென்மையான பேச்சினை
உடைய; மா மடந்தையர் எலாம் - பெருமயுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு
சேர்தலால் - வீதியை அடைந்தபடியால்; தவளமாடம் - வெண்ணிற
மாளிகைகள்; தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன-
தேன் பொருந்திய நறுமணம் வீசும் சுடர் தலை உடைய திருமகளை விட்டுப்
பிரிந்த தாமரைமலர்போல் ஆயின.
காமரம் என்பது பண் நிரம்பினாற் போன்ற பேச்சு. மகளிர்
போனபடியால் வெறுமைஅடைந்த மாளிகையைத் திருமகள் நீங்கிய
தாமரைபோல் என்றார். தவளம் - வெண்மை.“திருப்புறக் கொடுத்த
செம்பொன் தாமரை போன்று கோயில், புரிக்குழல மடந்தை போகப்
புலம்பொடு மடிந்த அன்றே” என்ற சிந்தாமணி (560) இங்கு ஒப்பு
நோக்கற்குரியது. ‘ஏ’ காரம்ஈற்றசை. 197
