நகர் நீங்கு படலம் - 1889

bookmark

1889.    

மஞ்சு என அகிற் புகை வழக்கு மாளிகை
எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
அஞ்சனக் கண்ணீன் நீர் அருவி சோர்தர,
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார்.

     மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை - மேகம் போன
அகிற் புகையானது சஞ்சரிக்கும் மாளிகையினது; எஞ்சல் இல்சாளரத்து -
குறைதல் இல்லாத (காற்று வழங்கும்) பலகணி வழியாக (இராமனைக் கண்டு); 
இரங்கும் இன்சொலார் - வருந்தும் இனியசொல்லினை உடைய மகளிர்;
அஞ்சனக் கண்ணின் - மை தீட்டப் பெற்ற கண்ணிலிருந்து; நீர் அருவி
சோர்தர - நீர் அருவியாக வழிய; பஞ்சரத்து இருந்து அழும் கிளியின்-
கூட்டின்கண் இருந்து  அழுகின்ற கிளியைப் போல;  பன்னினார் -
சொன்னதையே சொல்லிச் சொல்லிப் புலம்பினார்.

     பலகணி வழியாகத் தலைகாட்டி  அழும் மகளிர் கூட்டில் இருந்து
அழும் கிளி,  போன்றனர்என்க.  பன்னுதல் - திரும்பத் திரும்பச்
சொல்லுதல்,  கிளி சொன்னதைத் திரும்பத் திரும்பச்சொல்லும் ஆதலின்
இங்கே பன்னுதலுக்கும்  உவமையாயிற்று.                          194