நகர் நீங்கு படலம் - 1883
1883.
‘திரு அரை சுற்றிய
சீரை ஆடையன்,
பொரு அருந் துயரினன்,
தொடர்ந்து போகின்றான்.
இருவரைப் பயந்தவள்
ஈன்ற கான்முளை
ஒருவனோ, இவற்கு இவ்
ஊர் உறவு?’ என்றார் - சிலர்
சிலர் -; ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அழகிய
இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்; பொரு
அருந்துயரினன் - ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு; தொடர்ந்து
போகின்றான் - (இராமனைப் ) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற;
இருவரைப் பயந்தவள் - (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு
பிள்ளைகளைப் பெற்றசுமித்திரையானவள்; ஈன்ற - பெற்றெடுத்த;
கான்முளை - மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? - ஒருவன்
மட்டும்தானா?; இவற்கு இவ்ஊர் உறவு’ - இராமனுக்கு இந்தஊரில்
உறவாக இருப்பவர் (வேறு யாரும் இலரோ);’ என்றார் -.
தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டு்மே பின்
தொடர்ந்து, செல்வது கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய
பேச்சுஇது. 188
