நகர் நீங்கு படலம் - 1706
1706.
‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ
என் பிழைத்தனை?’ என்று, நின்று ஏங்குமால் -
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்,
பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே.
‘அன்புஇழைத்த மனத்து அரசற்கு - உன்னிடத்துப் பேரன்பு
செய்துவந்து மனத்தை உடையதயரத சக்கரவர்த்திக்கு; நீஎன்
பிழைத்தனை’ - நீ என்ன தவறு செய்தாய்;’ என்றுநின்று- என்று
சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்-
முற்பிறவியிற் செய்தவினையால் இப்போது வறுமையில் வாடியவர்கள்;
பொன் பிழைக்க- எதிர்பாராமல்கிடைத்த பொன்னானது தவறியதால்;
புலம்பினர் போல- புலம்பியவர்களைப் போல; ஏங்கும் - வருந்து
வாள் ஆயினள்.
பெறாது பெற்ற செல்வமாகிய புத்திரப் பேற்றைப் இப்போது காட்டிற்கு
அனுப்பி இழக்கநேர்ந்தபடியால் வறுமையில் வாடியவர் பொன்னைப் பெற்று
அதுவும் கைநழுவியபோது வருந்துவது போலவருந்தினாள் என உவமை
கூறினார் - பொன் தவறிப்போக இருக்க அதைத் திரும்ப இறுக்க
மூடிப்பிடிப்பவர் எனவும், பொன் தவறிப் போகப் பொதிந்தனர் - அதாவது
முகத்தை மூடிக்கொண்டுஅழுபவர் போல எனவும், பொன்
தவறிப்போகும்படி வைத்திருந்தவர் போல எனவும் பொருள் கூறுவது
உண்டு, ஏற்பது கொள்க. ‘ஆல்’, ‘ஏ’ அசைகள். 12
