நகர் நீங்கு படலம் - 1705
1705.
‘நன்று மன்னன் கருணை’ எனா நகும்;
நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து
என்று போவது? எனா எழும்; இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனள் போலுமே.
‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் - ‘சக்கரவர்த்தி உன்பால்
காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற
மைந்தனை நோக்கி - தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ்
சுரத்துப் போவது என்று’ எனா எழும் - நீண்டகாட்டு வழியில்
போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்; இன் உயிர்
பொன்றும்போது உற்றது - இனிய உயிர் போகும்போது அடைகின்ற
மரண வேதனையை; உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல
ஆனாள்.
தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர்
அடைந்தாள் என்பதாம். ‘ஏ’ஈற்றசை. 11
