நகரப் படலம் - 164

bookmark

எங்கும் மலர்ப்பல்லவப் பள்ளி

164.

காடும். புனமும். கடல் அன்ன கிடக்கும். மாதர்
ஆடும் குளனும். அருவிச் சுனைக் குன்றும். உம்பர்
வீடும். விரவும் மணப் பந்தரும். வீணை வண்டும்
பாடும் பொழிலும். மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!
 
காடும்   புனமும்  கடலன்ன  கிடங்கும் -  அந்நகரைச்  சூழ்ந்த
காடுகளிலும் கொல்லைகளிலும் கடல் போன்ற  அகழியின்  ஓரங்களிலும்;
மாதர்    ஆடும்  குளனும் -   பெண்கள்     நீர்     விளையாடும்
தடாகங்களிலும்;அருவிச்    சுனைக்  குன்றும்  -    அருவிகளையும்.
சுனைகளையும்   உடைய   மலைகளிலும்;   உம்பர்  வீடும்-   மேல்
வீடுகளிலும்;   விரவும்   மணப்பந்தரும் -   பற்பல    இடங்களிலும்
விரவியுள்ள  முத்துப்   பந்தர்களிலும்;   வீணை   வண்டும்   பாடும்
பொழிலும் -  வீணை    போல   வண்டுகள்    ரீங்காரம்    செய்யும்
சோலைகளிலும்;   மலர்ப்பல்லவப்   பள்ளி    மன்னும்-   (ஆகிய
இடங்களிலெல்லாம்)   மலர்களாலும்    தளிர்களாலும்    அமைந்துள்ள
படுக்கைகள் நிலைத்திருக்கும்.

அந்நகரத்தில்     வாழ்பவர்களின்  செல்வச்  செருக்கையும் கவலை
இல்லாமையையும்.  களிப்பின்  மிகுதியையும்  காட்டி   நிற்கும்  பாட்டு
இது.  வீறு  கோள்  அணியாகும்.  மாதர்:  அழகு-   பண்பாகு  பெயர்
(பெண்களை  உணர்த்தி  நின்றது). பல்லவம்:  இளந்தளிர்.   உம்பர்வீடு:
மேன்மாடி. மன்னோ: அசை.                                  72