நகரப் படலம் - 163
கோபுர மதில்களின் உயர்வு
163.
வன் தோரணங்கள் புணர் வாயிலும். வானின் உம்பர்
சென்றுஓங்கி. ‘மேல்ஓர் இடம் இல்’ எனச் செம்
பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளோர் குணம் கூட்டு இசைக் குப்பை
என்ன-
ஒன்றோடு இரண்டும். உயர்ந்து ஓங்கின. ஓங்கல் நாண.
வன் தோரணங்கள் புணர் வாயிலும்-வன்மையான தோரணங்கள்
பொருந்திய வாயில்களும்; செம்பொன் இஞ்சி ஒன்றோடிரண்டும்-
செம்பொன்னால் அமைந்த மதில்கள் ஒன்றோடிரண்டாகிய மூன்றும்;
வானின் உம்பர் சென்று ஓங்கி-வானத்தின் மேலே சென்று உயர்ந்து;
மேல் ஓர் இடம் இல் என - அதற்கு மேலே செல்ல ஒரு
இடமும் இல்லை என்பதால்; குன்று ஓங்கு தோளோர் - மலை
போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின்; குணம் கூட்டு
இசைக் குப்பை என்ன- சிறந்த குணங்களுடன் கூடிய நட்புள்ளம்
புகழ்த் தொகுதி ஆகிய நல்ல பண்புகள் உயர்ந்திருப்பது போல;
ஓங்கல் நாண உயர்ந்தோங்கின- வாயில் மதில் ஆகியவைகளின்
உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.
‘இஞ்சி ஒன்றோடிரண்டு’ என்பதற்கு அக நகர். இடை நகர். புறநகர்
மதில்கள் மூன்று என்பது கருத்து. கூட்டு: நட்பு. இசைக்குப்பை:
புகழ்த் தொகுதி. ஓங்கல்: மலை. இஞ்சி: மதில். 70. 71. இரண்டு
பாடல்களாலும் கொடிகளும். தோரண வாயிலும் சிறப்பித்துக்
கூறப்பட்டன. 71
