நகரப் படலம் - 158
மகளிர்சிலர் பொழுதுபோக்கும்
நகரத்தார் பொழுதுபோக்கு
158.
ஊடவும். கூடவும். உயிரின் இன் இசை
பாடவும். விறலியர் பாடல் கேட்கவும்.
ஆடவும். அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும். பொழுது போம்- சிலர்க்கு. அத் தொல்நகர்.
அத்தொல்நகர் சிலர்க்கு - அந்தப் பழமை வாய்ந்த நகரத்திலே
வாழும் சிலர்க்கு; ஊடவும் கூடவும் - காதலர்களோடு ஊடல்
கொள்ளும் ஊடல் தீர்ந்து கூடி இன்புற்று மகிழவும்; உயிரின்
இன்னிசை பாடவும் - உயிரினும் சிறந்ததான இனிய இசை பாடி
மகிழவும்; விறலியர் பாடல் கேட்கவும் - இசையில் வல்ல
விறலியர்களைப் பாடச்செய்து. அதனைக் கேட்கவும்; ஆடவும்-
இசைக்கேற்ப நடனம் ஆடவும்; அகன்புனல் ஆடி- இடமகன்ற
நீர்நிலைகளிலே நீராடவும்; அம்மலர் சூடவும் பொழுதுபோம்-
அழகிய மலர்களை அணிந்து மகிழவும் ஆகிய செயல்களால் பொழுது
போகும்.
ஊடுதல்- கூடி மகிழ்தல்- பாடுதல்- பாடல் கேட்டல். சூடுதல்-
புனலாடல்- மலர் சூடல் ஆகிய செயல்களால் சிலருக்குப் பொழுது
போகும்; போம்: போகும் என்பதன் தொகுத்தல் விகாரம். 66
