நகரப் படலம் - 156

bookmark

மாளிகையில் மாதர்கள் முகமும் விழிகளும் மலர்தல்

156.

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன. மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை.
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.
 
சூளிகை மழை முகில் தொடக்கும்- அந் நகரத்து   மாளிகைகளின்
உச்சி   (மிக  உயர்ந்திருப்பதால்)  மேகத்தைப்  பிணிக்கும்;   தோரன
மாளிகை    மகளிர்   வாண்முகம்  மலர்வன -   தோரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு   விளங்கும்   மாளிகைகளிலெல்லாம்     மகளிரின்
ஒளிமிகு  முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும்; அன்னவை  வாளிகள்
மலர்வ- அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்);   மற்று
அவை ஆளிகள் அன்னவர் நிறத்தில் ஆழ்ப-  மற்று. அவ்வம்புகள்
சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.

தொடக்கும்: பிணிக்கும்;  வாள்முகம்:  ஒளி   பொருந்திய    முகம்;
வாளிகள்:  அம்புகள்;  கண்களை  அம்பு  என்றது   உருவகம்;  நிறம்:
மார்பு; அன்னவை: அம்முகங்கள்; ஆளி: சிங்கம்.                 64