நகரப் படலம் - 153

bookmark

வாச்சிய ஒலிகள் கடலொலியை வென்றமை

153.

வளை ஒலி. வயிர் ஒலி. மகர வீனையின்
கிளை ஒலி. முழவு ஒலி. கின்னரத்து ஒலி.
துளை ஒலி. பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி.- கடல் ஒலி மெலிய. விம்முமே.
 
வளை ஒலி வயிர் ஒலி- (அந்த நகரமெங்கும்)  சங்குகளின்  ஓசை.
கொம்புகளின் ஓசை; மகர வீணையின்  கிளை  ஒலி-   மகர   யாழ்
இனங்களின்  ஓசை;  முழவு ஒலி கின்னரத்து  ஒலி-  மத்தள  ஓசை.
கின்னர  ஓசை; துளை  ஒலி-  துளைக்  கருவிகளான   புல்லாங்குழல்
முதலியவைகளின் ஓசை;  பல்இயம்  துவைக்கும்-   மற்றும்  பலவகை
வாத்தியங்கள்  முழக்கும்; சும்மையின் விளைவு  ஒலி-  ஆரவாரத்தின்
விளைவாக உண்டாகும் ஓசை; கடல் ஒலி மெலிய  விம்மும்-  (ஆகிய
இவ்வோசைகள் எல்லாம்) கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.

அயோத்தி     நகரமெங்கும் சங்கு முதலியவைகளின் ஒலி.   கடல்
முழக்கம்  கீழ்ப்பட  மேலோங்கி  முழங்கும் என்கிறார்.  வளை:  சங்கு.
வீணையின்  கிளை:  வீணையின்  இனம். கின்னரம்: ஒருவகை   யாழ்.
துளை:   துளைக்   கருவிகள்   (ஆகுபெயர்).  சும்மை:     பேரொலி.
துவைக்கும்: முழக்கும்.                                       61