நகரப் படலம் - 152
மைந்தர் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இவை எனல்
152.
அதிர் கழல் ஒலிப்பன; அயில் இமைப்பன;
கதிர் மணி அணி வெயில் கால்வ; மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன; முத்தம் மின்னுவ;
மதுகரம் இசைப்பன; - மைந்தர் ஈட்டமோ
அதிர்கழல் ஒலிப்பன - அந்நகரத்திலே அதிர்கின்ற வீரக்
கழல்களின் ஒலி ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக; அயில் இமைப்பன-
வேல் முதலிய படைக்கலங்கள் ஒளிர்வனவாக; கதிர்மணி அணி
வெயில் கால்வ- ஒளிமிக்க மணிகளாலான அணிகலன்கள் எங்கும்
ஒளிவீசுபவையாக; மான்மதம் முதிர்வு உறக் கமழ்வன- கத்தூரி
மிகுதியும் கமழ்வதாக; முத்தம் மின்னுவ- அணிகலன்களில் அமைந்த
முத்துக்கள் மின்னல் போல ஒளிர்வன; மதுகரம் இசைப்பன-
வண்டுகள் பண் பாடுவனவாக; மைந்தர் ஈட்டமே- (இவ்வாறாக)
ஆடவர் கூட்டம் விளங்கியது.
மைந்தர் ஈட்டம் கழல் ஒலிக்க. அயில் இமைக்க. வெயில் கால.
கமழ்வனவாக. முத்தம்மின்ன. மதுகரம் இசைக்க இழுத்தன எனக்
கொண்டு கூட்டி முடிக்க.
மதுகரம்: தேனைச் சேகரிக்கும் வண்டுகள்; முத்தம்: முத்து மாலை
முதலிய அணிகள்; மான் மதம்: கத்தூரி மானிடமிருந்து கிடைக்கும்
மணப்பொருள். 60
