நகரப் படலம் - 140
பாடலால் பறவைகளும் பரவசமாதல்
140.
இறங்குவ மகர யாழ் எடுத்து இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ; அவ் வழி
கறங்குவ வள் விசி கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே.
மகர யாழ் - மகர யாழிலே எடுத்த (விரலாலே நெருடி
கவர்ந்தெடுக்கப்பட்ட); இன் இசை- இனிய இசையொலிகள்; நிறங்
கிளர்- உள்ளக் கிளர்ச்சி தரும் பாடல்கள் காரணமாக
வாய்ப்பாட்டோடு; இறங்கவே- யாழ் இசை நலிந்தொலிப்பன; நிமிர்வ-
எடுத்தொலிப்பன; அவ்வழி- அந்த முறையில்; வள் விசி கருவி- வார்
கட்டிய கருவியாகிய முழவுகள்; கறங்குவ- ஒலிப்பன (அந்த இசையைக்
கேட்டு); மகளிரோடு- பெண்களோடு; ஓதும் கிள்ளைகள்- பேசும்
கிளிகள்; கண்முகிழ்த்து உறங்குவ- கண்ணை மூடிக் கொண்டு
உறங்குவனவாம்.
மகரயாழ் பத்தொன்பது நரம்புகள் கொண்டது. இறங்குவனவும்
நிமிர்வனவுமாகிய இசையோட்டங்களை முறையே அவரோகணம்,
ஆரோகணம் என்பர். யாழிசைக்கு ஏற்ப முடிவுகளும்
முழங்குவனவாம். இசை நயத்தில் ஈடுபட்டுக் கிளிகள் உறங்குகின்றன.
வள்: தோல், விசி கருவி: வினைத்தொகை. 48
