நகரப் படலம் - 138

bookmark

நடனமாதர் கண்பட்டுக் காண்பார்க்கு உயிர்
மெலிதலும் காதல் வளர்தலும்

138.

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன; வளர்வது, ஆசையே.
 
அரங்கிடை மடந்தையர் ஆடுவார்-நடன அரங்குகளிலே பெண்கள்
நடனம்  ஆடுவார்கள்; அவர கருங் கடைக்கண் அயில்- அவர்களின்
கருமையான   கடைக்கண்களாகிய   வேல்கள்;   காமர்  நெஞ்சினை
உருங்குவ-  காதல்   மிக்க  ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம்;
மற்று   அவர் உயிர்   அன்னவர்   மருங்குல்  போல்-  பின்னும்
அவ்வாடவரின்     உயிர்கள்  அப்பெண்களின்  இடைகளைப்  போல;
தேய்வன- மெலிவனவாகும்;  வளர்வது ஆசை- அந்த மைந்தர்களுக்கு
அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.

நடன       அரங்கில்  நடனமாடும் மகளிரின் பார்வை அவர்களது
காதலர்களான ஆண்களின்    உயிரை உண்ணும். அம்மைந்தர்தம் உயிர்
அம்மகளிரது  இடையென    மெலியும்.  ‘உறங்குவ’ என்பது ‘உருக்குவ’
என்பதன்  மெலித்தல்  விகாரம்.    உருங்குதல்:  உண்ணுதல்  என்றும்
பொருள்  கொள்ளலாம். இதனை “அரவின்   உடலுயிர் உருங்குவணம்”
என்று பரிபாடலாலும் (பரி. 4: 42) அறியலாம்.                    46