நகரப் படலம் - 134
அகில் புகையுண்ட மேகங்கள் தோய்தலால்
கடல் நறுமணம் கமழுகின்றதனெல்
134.
ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்
பாய்ந்த தரையின் நிலை பகரல் வேண்டுமோ?
ஆய்ந்த மேகலையவர்- நுட்ப வேலைப்பாடு அமைந்த மேகலை
அணிந்த மகளிர்; அம்பொன் மாளிகை வேய்ந்த- தமது கூந்தலுக்கு
மணமூட்ட, மாளிகைகளிலே எழுப்பிய; கார் அகில் புகை உண்ட-
கரிய அகிற் புகையை உண்ட; மேகம் போய்த் தோய்ந்த- மேகங்கள்
சென்று படிந்த; மா கடல் நறும் தூபம் நாறு மேல்- அந்தப் பெரிய
கடலும் அகிலின் நறுமணம் கமழும் என்றால்; பாய்ந்த தரையின்
நிலை- மேகங்களிலிருந்து கீழே விழும் மழைத்தாரையின் தன்மையை;
பகரல் வேண்டுமோ- அதுவும் அகில் மணம் கமழ்கிறது எனச்
சொல்லவா வேண்டும்?
மகளிர் எழுப்பிய அகில் புகையை உண்ட மேகங்கள் கடலில்
படிவதால் கடலும் அகில் மணம் வீசுகிறது. மேகத்திலிருந்து கீழே
விழும் மழைத் தாரை மணம் கமழ்வதைச் சொல்ல வேண்டுமோ
என்பது கருத்து. இது தொடர் நிலைச் செய்யுட் பொருட் பேரணி. 42
