நகரப் படலம் - 125

bookmark

மாளிகையில் வாழ்வார் இயல்பும் அணிகளும்

125.

அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி, தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில; பகலை வென்றன.
 
அணி     இழை மகளிரும்  - அழகிய அணிகலன்களை அணிந்த
பெண்களும்;   அலங்கல்   வீரரும்-   மாலையணிந்த  மார்பினரான
வீரர்களும்;  துணிவன  அறநெறி-  அற  நெறியினையே  துணிவுடன்
பற்றுவர்;   மணியினும்  பொன்னினும்   வனைந்து-  மணிகளாலும்,
பொன்னாலும்   புனையப்பட்டுள்ள  மாளிகைகள்;  தணிவு  இலாதன-
என்றும்  அறநெறிகளில்  குறையாது  நிறைந்திருப்பவை;  பிறிது பணி
இயன்றில-   வேறுகல், மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை
அல்ல;  பகலை  வென்றன-  தம்  ஒளியால்  சூரியனையும்  வென்று
விளங்குபவை.

மாளிகைகள்     என்ற   எழுவாய், தொடர்ச்சி நோக்கி வரவழைத்து
உரைக்கப்பட்டது.    பொன்னாலும்,  மணியாலும்  இயன்றன  ஆதலால்
அம்மாளிகைகள்  சூரியனைவிட    ஒளிபொருந்தியனவாக ஒளிர்கின்றன
என்கிறார்.    மாளிகைகளில்      வாழும்    மகளிரும்    ஆடவரும்
அறநெறியிலேயே    நிற்பவர்; ஆதலின்    அவர்     மாளிகைகளும்
அறநெறியில்  தணிவு  இலாதன  ஆயின.    புறவொளியால் கதிரவனை
வென்றவை  மாளிகைகள்;   ஆயினும்  அகவொளியாகிய அறநெறியால்
சிறந்தவை. ஆக, பெருமைக்கு உரியது என்பது கவிஞர் குறிப்பு.      33