நகரப் படலம் - 124
மாளிகைகள் தேவவிமானம்போலத் திகழ்தல்
124.
புக்கவர் கண் இணை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நிலைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும்.
புக்கவர் - பார்க்கப் (புகுந்தவர்) வந்தவர்; கண் இமை- கண்
இமைகள்; பொருந்துறாது- வியப்பின் மிகுதியால், மலர்ந்து விளங்குமே
அல்லாது ஒன்றுடன் ஒன்று சேரா (கண் கொட்டாமல் பார்த்தனர்
என்பது கருத்து); ஒளி- மாளிகைகளில் பதித்த இரத்தினங்களின்;
பூசிய வெண்சாந்தின் ஒளி; தொக்கு உடன் தயங்கி - பார்ப்பவர்
உடலின்மீது பாய்வதால் (எதிரொளி) அவர்கள் விளகம் பெற்று;
விண்ணவரின்- தேவர்களைப் போல; தோன்றலால்-
காட்சியளிப்பதாலும்; திக்குற- எல்லாத் திசைகளிலும்; செல்லும்-
செல்ல வல்ல; தெய்வ வீடு- தெய்வீக விமானம்; ஒக்க- போல; நின்று-
நிலத்தல் பதிந்து கிடக்கும்; உம்பர் நாட்டின்- அம்மாளிகைகளின் ஒளி
வெள்ளம் தேவர் உலகத்தும்; இமைப்பன- சென்று ஒளி வீசுவன.
எப்போதும் ஒளி உமிழ்வதும் இயங்கும் இயல்பினவுமாய தேவ
விமானங்கள் மண்ணகத்துத் தங்கிய போல் அம்மாளிகைகள்
விளங்கின. அவற்றின் ஒளி காண்பார் உடல்களில் பதிவதாலும் கண்
இமையாது இருத்தலாலும் அவர்களும் தேவராயினர் என்பது கருத்து.
32
