நகரப் படலம் - 123
123.
பாடகக் கால்அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன.
பாடகக் காலடி- வேலைப்பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம்;
பதுமத்து ஒப்பன- தாமரை மலர் வடிவத்தில் அமைந்தனவும்;
சேடரைத் தழீஇயின- கடைக்கால் ஆழத்தால் நாக உலகை
தழுவியுள்ளனவும்; செய்ய ஆயின- வேலைப் பாட்டினால் செம்மை
உடையனவும்; நாடு அகம் தொழிலின- யாவரும் விரும்பிக் காணும்
தொழில் திறம் உடையனவும்; நடுவு துய்யன- நடுவிட மெல்லாம்
தூய்மை உடையனவும்; ஆடகத் தோற்றத்து- பொன்னைப் போன்ற
தோற்றமுடையனவும்; அளவு இலாதன- ஆகிய மாளிகைகள்
அளவற்றனவாம்.
நாடு அகத் தொழிலின: கருதிச் செய்யப்படும் தொழில் திறம்
உடையன என்றும் பொருந்தும். இப்பாடல் விலைமகளிரையும்
குறிக்கும் வகையில் சிலேடையாக அமைந்துள்ளது. பாடகம் அணிந்த
மகளிரின் பாதங்கள் தாமரை மலரை ஒப்பன; இளையரை (சேடர்).
அணைத் திருப்பவர்; சிவந்த வாய் உடையவர்; நடனத் தொழில்
அறிந்தவர்; இடுப்பு (நடுவு); பஞ்சின் (தூய்) நுனியை ஒத்தது- என்று
தக்கவாறு பொருள்கொள்ள வேண்டும்.
பாடகம்- கால் அணி; பாடு அகம்- வேலைப்பாடு மிகுந்த.
ஒப்பன, தழீஇயின, வாயின, தொழிலின், துய்யன, தோற்றத்த-
முற்றெச்செங்கள்.
தழீஇ- தழுவி (சொல்லிசை அளபெடை). 31
