நகரப் படலம் - 120

bookmark

120.

புள்ளிஅம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விருந்த போலுமே.
 
தள்ள  அருந் தமனியத் தகடு வேய்ந்தன- நீக்குவதற்கரிய பொன்
தகடுகள்   மேலே  வேயப்பட்டனவாகிய;  புள்ளி  அம்புறவு  இறை-
உடலில்  புள்ளிகளை  உடைய அழகிய மாடப் புறாக்கள்; பொருந்தும்
மாளிகை-  தங்கியிருக்கின்ற  மாளிகைகள்;  வெள்ளி  அங்கிரிமிசை-
அழகிய  வெள்ளிமலையின்  மீது; எல்ல அரும் கதிரவன்- இகழ்தற்கு
அரிய  சூரிய   தேவனது;  இளவெயிற்குழாம்  விரிந்தது  போலும்-
இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.

வெண்  சுதை பூசிய வெள்ளைநிற மாளிகைகளின் மீது, பொன் தகடு
வேய்ந்து    பொலிவது,  வெள்ளிமலை மீது, கதிரவனின் இளங்கதிர்கள்
விரிந்துகிடப்பது     போன்று    விளங்கியது    என்கிறார்.   இதுவும்
தற்குறிப்பேற்ற     அணியாகும்.  புள்ளி:  உடலின்  மீதுள்ள  அழகிய
புள்ளிகள். புறவு இறை:    புறாக்களுக்கு அரசன் (மாடப்புறா). தமனியம்:
தங்கம். வெயிற்குழாம்: கதிர்களின் தொகுதி.                     28