நகரப் படலம் - 119

bookmark

மாளிகைகளின் அமைதி (119-123)

மாளிகைகள்
 
கலிவிருத்தம்

119.

‘திங்களும் கரிது’ என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்- தரங்கம் போலுமே.
 
திங்களும்     கரிது  என-  சந்திரனும்  கருமை  நிறத்து  என்று
கூறுமளவுக்கு;  வெண்மை தீற்றிய- வெண்மை நிறம் பொருந்தப் பூசிய;
சங்க  வெண்  சுதை  உடை  -  சங்கிலிருந்து  செய்த  வெண்ணிறச்
சுண்ணாம்புச்     சாந்தால்  அமைந்த; தவள  மாளிகை  - வெள்ளை
மாளிகைகள்;  வெங்கடுங்  கால்  பொர-  கடுமையான  பெருங்காற்று
வீசுவதால்;  மேக்கு  நோக்கிய-  மேல்  நோக்கி  எழுந்து;  பொங்கு
இரும்பாற்கடல்- பொங்கும்  பெரிய பாற்கடலின்; தரங்கம் போலுமே-
அலைகளைப் போலக் காணப்படும்.

வானோங்கி     உயர்ந்து விளங்கும் வெண்ணிற மாளிகைகள்  கடும்
காற்று  வீசுவதால்  மேலெழுந்து    பாற்கடலின்  அலைகளை  ஒக்கும்
என்றதால்    நிறம்   உயர்ச்சி     இவை   பற்றி   வந்த   தன்மைத்
தற்குறிப்பேற்றவணியாகும்.  சுதை:    சாந்து.  தீற்றிய:  பூசிய.  தவளம்:
வெண்மை. மேக்கு: மேலே. கால்பொர: காற்று மோத.              27