நகரப் படலம் - 114
கோபுர வாயிலின் சிறப்பு
வாயில் காடு
114.
எல்லை நின்ற வென்றி யானை என்ன
நின்ற; முன்னம் மால்,
ஒல்லை, உம்பர் நாடு அளந்த
தாளின் மீது உயர்ந்தவால்-
மல்லல் ஞாலம் யாவும்
நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும்
அன்ன- வாயிலே.
வாயில் - அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள் (நான்கும்);
எல்லை நின்ற வென்றியானை என்ன நின்று- நான்கு திசைகளிலும்
நிற்கும் திக்கு யானைகள் என்னும்படி நின்றன (அன்றியும்); மால்
முன்னம் ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின்- திருமால்
வாமனனாகவந்து விரைவாக திருவிக்கிரமனாகி விண்ணுலகத்தை
அளந்த திருவடியைவிட; மீது உயர்ந்தவால்- மேலும் வாயில்கள்
உயர்ந்து நின்றன; மல்லல் ஞாலம் யாவும்- வளம் நிறைந்த
உலகத்தவரெல்லாம்; நீதி மாறுறா வழக்கினால்- நீதி தவறாது நடக்கச்
செய்வதால்; நல்ல ஆறு சொல்லும்- நல்ல நெறிகளைக் கூறும்; வேதம்
நான்கும் அன்ன- நான்மறைகளையும் ஒத்திருந்தன.
திக்கு யானைகள் தமக்குரிய எல்லையில் நிலைபெயராது நிற்பது
போல நகரின் நான்கு திசைகளிலும் உள்ள கோபுர வாயில்கள்
காணப்பட்டன.அவற்றின் உயரத்தைக் குறிப்பிட, விண்ணுலகை அளந்த
திருமாலின் திருவடிகளை விடவும் உயர்ந்திருந்தன என்றார்.
செங்கோலின் சிறப்பால் நீதி தவறாது காத்தலின், நன்னெறி கூறும்
நான்மறை போன்றது என்றார்.
மல்லல்: வளம், நல்ல ஆறு: நல்ல நெறி, ஆல்: அசை. 22
