நகரப் படலம் - 113
அகழியும் காவற்காடும்
அகழியை வளைத்த சோலை
113.
அன்ன நீள் அகன்
கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு,
வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த
சோலை, எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
நீல ஆடை போலுமே.
அன்ன நீள் அகன் கிடங்கு - அத்தகைய நீண்ட, பரந்த
அகழியை; சூழ்கிடந்த ஆழியை- சுற்றிக் கிடந்த சக்கரவாள மலையை;
துன்னி வேறு சூழ் கிடந்த- நெருங்கி வேறாகச் சூழ்ந்து
கொண்டிருக்கும்; தூங்கு வீங்கு இருட்பிழம்பு- அசையாது,
மிகுந்திருக்கும் இருள் கூட்டமோ; என்னலாம் இறும்பு - என்று
சொல்லத்தக்க காடு போன்று; சூழ்கிடந்த சோலை எண்ணில் -
சூழ்ந்திருக்கும் சோலையை நினைத்தால்; அப்பொன்னின் மா
மதிட்கு- அந்த அழகிய மதிலுக்கு; உடுத்த நீல ஆடை போலும்-
உடுத்திய நீல ஆடையைப் போலத் தோன்றும்.
நகரைச் சுற்றியிருக்கும் மதில் சக்கரவாள மலை; அதனைச்
சுற்றியிருக்கும் அகழி, பெரும் புறக்கடல்- அகழியைச் சூழ்ந்திருக்கும்
காவற் காடு. மிகுந்து பரவிய இருள் கூட்டம், இது தன்மைத்
தற்குறிப்பேற்றவணி. காடு பொன் மதிலுக்கு உடுத்திய நீல ஆடை
போலக் காணப்பட்டது என்பதும் தற்குறிப்பேற்றம். கிடங்கு: அகழி.
இறும்பு: செயற்கைக் காடு. இதனை ‘மிளை’ என்னும் காவற்காடென்பர்.
நீல ஆடை கண்ணெச்சில் (கண்ணேறு) படாமைக்குச் சுட்டப்பட்டது
என்ப. 21
