நகரப் படலம் - 112

bookmark

அகழியின் கரையமைப்பு

112.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி
   கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு
   அடுத்துறப் படுத்தலின்,
‘தளிந்த கல்-தலத்தொடு, அச்
   சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்
   தேவராலும் ஆவதே?
 
விளிம்பு சுற்றும் வெள்ளிக்கட்டி முற்றுவித்து - அந்த அகழியின்
ஓரம்  முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து;  உள்ளுறப் பளிங்கு
பொன்தலத்து அகட்டு அடுத்துறப்படுத்தலின்  -  உள்ளிடமெல்லாம்
பளிங்குக்  கற்களைத்  தள   வரிசையாகப் பதித்திருப்பதாலே; ‘தளிந்த
கல்தலத்தொடு- பளிங்குக் கல்லால்  தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு;
அச்சலத்தினை-  அந்த  அகழியின்  தெளிந்த தண்ணீரை; தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்- தனியாக வேறு பிரிந்து இது நீர்
இது  பளிங்கு  என்று  தெளிவாகப்   பிறர்க்கு உணர்த்துவோம் என்று
சொல்வது; தேவராலும் ஆவதோ-தேவர்களாலும் இயலாததொன்றாகும். 

அகழியின்    விளிம்பு   வெள்ளி -   தளம் பளிங்கு; தெளிந்த நீர்
எனவே  நீருக்கும்  பளிங்குக்  கற்களுக்கும்   வேறுபாட்டை  அறிவது
தேவர்களாலும்  ஆகாதது  என்பது  கருத்து.    இங்கே அகழியின் நீர்
தெளிவாக இருப்பதாகக் குறிப்பவர் முன்னே (106)   கலங்கியிருப்பதாகக்
குறித்திருக்கிறார்.                                         20