நகரப் படலம் - 110

bookmark

முதலைகள் ஒன்றோடொன்று பொருதல்

110.

ஈரும் வாளின் வால் விதிர்த்து,
   எயிற்று இளம் பிறைக் குலம்
போ மின்னி வாய் விரித்து,
   எரிந்த கண் பிறக்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன்
   தொடர்ந்து சீறு இடங்கர் மா,-
போரில் வந்து சீறுகின்ற போர்
   அரக்கர் போலுமே.
 
ஈரும்  வாளின் வால் விதிர்த்து-அறுக்கும் ரம்பம் போன்ற வாலை
அசைத்து; எயிற்று  இளம்  பிறைக்  குலம்  -  பற்களாகிய  பிறைக்
கூட்டம்;  பேரமின்னி  வாய்  விரித்து  -  ஒளி  வீசுமாறு  வாயைத்
திறந்துகொண்டு; எரிந்த கண் பிறங்கு தீ சோர- பிரகாசிக்கும் கண்கள்
தீப்பொறி  சிதற;   ஒன்றை  ஒன்று  முன்  தொடர்ந்து  -  ஒன்றை
மற்றொன்று  முந்திச் சென்று; சீறு இடங்கர்மா - சீறுகின்ற முதலைகள்;
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே -போர்க்களத்தே
வந்து  ஒருவருடன்  ஒருவர்  சினந்து  போர்    புரியும் அரக்கர்களை
ஒத்திருக்கும்.

முதலைகள்     சீற்றம் கொண்டு ஒன்றை  ஒன்று தாக்கிக் கொள்வது
போர்க்களத்திலே  சினந்து  போர் புரியும்   அரக்கர்களை ஒத்திருக்கும்
என்றார்.  பல என்பதால் பிறைக்குலத்தை   உவமை கூறினார். வாலுக்கு
ஈர்வாள் உவமை. வாள் இங்கே ரம்பத்தைக் குறித்தது.             18