நகரப் படலம் - 109

bookmark

அகழியில் முதலைகள் முழுகி எழும்புதல்

109.

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் 
   முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து
   பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப
   ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது
   அழுந்துகின்ற போலுமே.
 
சூழ்ந்த  நாஞ்சில் சூழ்ந்த ஆரை- ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில்
முதலிய   உறுப்புகளை  உடைய  நகரைச்  சுற்றிலும்   உள்ள  அந்த
மதிலின்;  சுற்றும்  முற்று  பாரெலாம் -  சுற்றிலும்  நிறைந்திருக்கும்
பாறைகளையெல்லாம்;  போழ்ந்து    மா    கிடங்கிடை-   பிளந்து
அமைக்கப்பட்ட   அந்தப்   பெரிய  அகழியிலே;  கிடந்து  பொங்கு
இடங்கர்மா -  தங்கி  மேலே  எழும்  முதலைகள்;  தாழ்ந்த  வங்க
வாரியில்  - ஆழமானதும், கப்பல்களை  உடையதும் ஆகிய கடலிலே;
தடுப்ப  ஒணா மதத்தினால் - தடுக்க இயலாத மதத்தினாலே; ஆழ்ந்த
யானை  மீள்  இலாது  - உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல்;
அழுந்துகின்ற போலும் - அமிழ்ந்து எழுவன  போலக் காணப்பெறும். 

அகழியிலே   முதலைகள் ஆழ்ந்து எழுவதற்கு, கடலிலே யானைகள்
ஆழ்ந்து  எழுவதை  உவமை    கூறினார்.  கருமை,  வலிமை, பருமை
இவைகளால்  முதலைக்கு    யானை  பண்புவமை.  நாஞ்சில்: ஏப்புழை
என்னும்  மதிலின்  உறுப்பு.    முற்றும்:  நிறைந்திருக்கும் பார்: பாசறை
“பாருடைத்த  குண்டகழி”  என்பது     புறநானூறு.  14.மா: பொதுவாக
விலங்குகளைக்  குறிக்கும்  இச்சொல்,    நீரில்  வாழும் உயிர்களையும்
பறவைகளையும் குறிப்பதுண்டு.                                17