நகரப் படலம் - 108

bookmark

அகழில் உள்ள தாமரைக் காட்டின் தோற்றம்

108.

அந்த மா மதில் புறத்து, அகத்து
   எழுந்து அலர்ந்த, நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம்,
   மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து
   போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க, மா
   மதில் வளைந்தது ஒக்குமே.
 
அந்தமா மதில் புறத்து- அந்தப் பெரிய மதிலின் வெளிப்புறமுள்ள;
அகத்து  எழுந்து  அலர்ந்த- அகழியிலே தோன்றி மலர்ந்துள்ள; நீள்
கந்தம்  நாறும்  பங்கயத்த  கானம்-  மிகுந்த மணம் வீசும் தாமரைக்
காடு; மாதரார் வாள் முகங்களுக்கு- பெருமை யுடைய அந்தப்புரத்துப்
பெண்களின்  ஒளியுடைய  முகங்களுக்கு;  முந்து  உடைந்து  போன-
முன்பு தோற்றுப் போனமையால்; மொய்ம்பு எலாம்  வந்து-  மீண்டும்
மிக்க வலிமை கொண்டு வந்து;  போர் மலைக்க மாமதில் வளைந்தது
ஒக்கும் - போர்புரிவதற்கு அந்த மதிலை வளைத்துக் கொண்டிருப்பதை
ஒக்கும்.

மாநகரின்     மதிலைச் சூழ்ந்திருக்கும்    அகழியிலே மலர்ந்துள்ள
தாமரை   மலர்கள்-   அந்தப்புரத்து     பெண்களின்  முகங்களுக்குத்
தோற்று-  மீண்டும்  வலிமை  பெற்றுப்    போர் செய்ய அந்த மதிலை
வளைத்திருப்பதை  ஒத்திருக்கும். இது    தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
அயோத்தி  நகரத்துப்  பெண்களின்      அழகைச்        சிறப்பித்து
இவ்வாறு  கூறினார். அகத்து: அகழியினிடத்து. மானம்: பெருமை.    16