நகரப் படலம் - 107

bookmark

மேகம் அகழைக் கடலாக மயங்கிற்று எனல்

எழுசீர் சந்த விருத்தம்

107.

ஏகுகின்ற தம் கணங்களோடும்
   எல்லை காண்கிலா,
நாகம் ஒன்று அகன் கிடங்கை
   நாம வேலை ஆம் எனா,
மேகம், மொண்டு கொண்டு எழுந்து,
   விண்தொடர்ந்த குன்றம் என்று,
ஆகம் நொந்து நின்று தாரை
   அம் மதிற்கண் வீசுமே.
 
தம்      கணங்களோடும் ஓடுகின்ற மேகம்- தம் கூட்டத்துடனே
செல்லும் மேகங்கள்;   எல்லை  காண்கிலா  நாகம்  ஒன்று  அகன
கிடங்கை-   எல்லை  காண  இயலாத, நாக லோகம்வரை ஆழ்ந்துள்ள
பரந்த  அகழியை;  நாம  வேலை  ஆம்  எனா- அச்சத்தைத் தரும்
கடலாகும்  எனக்  கருதி;  மொண்டு கொண்டு எழுந்து- நீரை முகந்து
கொண்டு எழுந்து; விண்  தொடர்ந்த  குன்றம்  என்று- அம்மதிலை
வானளவும்  உயர்ந்த  மலை  என்று  கருதி;  ஆகம் நொந்து நின்று-
உடல்   வருந்தி  அம்மதிலின்  மீது  நின்று;  தாரை  அம்மதிற்கண்
வீசுமே- மழைத் தாரையை அம் மதிலின்மீது பொழியும்.

மேகம்.     அகழியைக் கடல் என்று மயங்கி, அதன் நீரை மொண்டு
மதிலை    மலையென  மயங்கி  நின்று-  மழை  பொழியும் என்பதால்
மயக்கவணியாகும்.      அகழியின்   அகலமும்   ஆழமும்  மலையின்
உயரமும் கூறப்பட்டது.

நாம்:  அச்சப் பொருளைத்  தரும்  உரிச்சொல். அ: சாரியை பெற்று
நாம என நின்றது.                                          15