நகரப் படலம் - 106
அகழியைப் பற்றி அறிவிப்போம் எனல்
அகழியின் சிறப்பு
106.
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்- தடம் என யார்க்கும்
படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது;- நவிலலுற்றது நாம்.
நாம் நவில் உற்றது- நாம் இப்போது சிறப்பித்துச் சொல்லவந்தது;
அகழி- (அம்மதிலின் புறத்தே அமைந்த) அகழியானது; அன்ன
மாமதிலுக்கு- மேலே கூறப்பட்ட அத்தகைய பெரிய மதிலை; ஆழி
மால்வரையை அலைகடல் சூழ்ந்து அன- பெரிய சக்கரமான கிரியை,
அலைகள் பொங்கும் பெரும்புறக்கடல் சூழ்ந்திருப்பது போலச்
சூழ்ந்து; பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ்போய்- விலை
மாதர்களது மனத்தைப் போல மிகக் கீழே போய்; புன்கவி
எனத்தெளிவின்றி- இழிந்த பாடல்களைப் போல தெளிவு இல்லாமல்;
கன்னியர் அல்குல் தடம் என- கன்னியரின் அல்குலினிடம் போல;
யார்க்கும் படிவரும் காப்பினது ஆகி- எவருக்கும் நெருங்க இயலாத
காவலை உடையதாய்; நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது- நல்ல நெறியில் செல்ல விடாமல் தடுக்கும் ஐம்பொறிகளைப்
போன்றதாகிய எதிரிகளைத் தாக்கும் முதலைகளை உடையது.
இது முதல் ஏழு பாடல்கள் அகழியின் சிறப்பைக் கூறுவனவாய்
உயர்ந்து வளைந்துள்ள மதிலுக்குச் சக்கரவாள மலையும், அகழிக்குப்
பெரும்புறக் கடலும் உவமைகளாகும். அகழியின் ஆழம் எவர்க்கும்
முற்றாக உணரமுடியாது; எதுபோல் எனின் விலைமகளிர் மனக்கருத்து
அறியமுடியாதது போல். ஆழமாகத் தெளிவின்மையால் புல்லறிவாளர்
கவியும் அகழிக்கு உவமையாயிற்று. பொறிகள் வயபட்ட மனம்
நன்னெறியில் செல்லாது தீநெறியில் செல்லும்; அதுபோல விரைந்து
பாய்வன முதலைகள் என்கிறார். கராம்: முதலை. படிவு: தோய்தல்.
(ஒப்பு) பிரபுலிங்க லீலை மாயையின் உற்பத்திகதி. பா. 14 14
