நகரப் படலம் - 105
நகருக்கு அணியாக மதில் அமைந்தமை
105.
‘பூணினும் புகழே அமையும்’ என்று, இனைய
பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும்
இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,-
திகிரியும், செந் தனிக் கோலும்,
ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு
அணி என இயற்றியது அன்றே.
‘பூணினும் புகழே அமையும்’ என்று- அணிகலன்களை விடப்
புகழே சிறந்த அணிகலமாக அமையும் என நினைத்து; இனைய
பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும்- இத்தகைய நல்லொழுக்கத்தில்
நின்று நாட்டு மக்களைக் காப்பவரான; யாணர் எண்திசைக்கும்
இருளறு இமைக்கும்- அழகிய எட்டுத் திசைகளிலும் உள்ள இருள்
நீங்கும்படி ஒளிர்கின்ற; இரவிதன் குலமுதல் நிருபர்- சூரிய குலத்தில்
தோன்றிய அரசர்களின்; திகிரியும் செந்தனிக்கோலும் ஆணையும்-
ஆணையாகிய சக்கரமும் செங்கோலும் கட்டளையும்; சேணையும்
கடந்து திசையையும் கடந்து காக்கும்- மேலுலகத்தையும்
திசைகளையும் கடந்து சென்று காக்கவல்லது எனவே; ஆயினும்
நகருக்கு அணியென இயற்றியது அன்றே- ஆனாலும் அந்த
மாநகருக்கு அழகு செய்ய அமைந்தது அம்மதில் மட்டுமே.
ஆபரணங்கள் தரும் அழகு பெரிதன்றோ; புகழே சிறந்தது’ என்பது
சூரிய குலத்து அரசர்களின் கருத்து. அவர்களின் குல முதல்வனாகிய
சூரியனும் நாளும் நாளும் புதிய ஒளி வீசி இருள் தீர்ப்பவன். (ஒளி
என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் உண்டு). உலகு எங்கும்
புகழ் பரப்பி ஆள்பவர்கள் சூரிய குல மன்னர்; ஆதலின், அவர்கள்
யாரொடும் பகை கொள்ளார். எனவே, அயோத்தி நகரில் மதில்
பாதுகாப்புக்கு அன்று; அழகுக்கே - இப்பாடலின் கருத்து இது.
(யாரோடும் பகை கொள்ளலன் என்றபின் போர் ஒடுங்கும் புகழ்
ஒடுங்காது என்ற வசிட்டர் கருத்தொடு (1419) ஒப்பிட்டு உணரத்தக்கது.
யாணர் என்னும் சொல் புதிய வரவு, அழகு முதலான பலபொருள்
உடையது; நாளும் புத்தழகு தருதலின் சூரியன் ஒளியைப் புதுவரவிற்று
எனவும் கொள்ளலாம்.
திகிரி: ஆணையாகிய சக்கரம். ஆணை: கட்டளை. சேண்:
மேலுலகம். யாணர்: அழகு. பொற்பு: ஒழுக்கம். 13
