நகரப் படலம் - 103

bookmark

மதில் சூரியகுலத்தரசர்களை ஒத்துள்ளது எனல்

103.

கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர்
   முடித் தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும்
   நோக்க அருங் காவலின், வலியின்,
வேலொடு வாள், வில், பயிற்றலின், வெய்ய
   சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும்
   தன்மையின், தலைவர் ஒத்துளதே!
 
கோலிடை     உலகம் அளத்தலின்- செங்கோலால் உலகத்தைக்
காப்பதாலும்    (அளவுகோலால்    அளக்கப்படுதலாலும்);   பகைஞர்
முடித்தலை  கோடலின்-  பகை   மன்னரின் மகுடமணிந்த தலைகளை
அழிப்பதாலும்     (தன்னிடமுள்ள       இயந்திரங்களால்    பகைவர்
தலைகளைத்   துணிப்பதாலும்);    மனுவின்   நூல்நெறி   நடக்கும்
செவ்வையின்-   மனுநூல்   நெறிப்படி    நடக்கின்ற  நேர்மையாலும்
(சிற்பநூலின்படி  அமைந்து  நேராயிருப்பதலும்);  யார்க்கும்  நோக்க
அரும்   காவலின்-   எவருக்கும்   பார்க்க   இயலாதபடி   காக்கும்
திறமையாலும் (எளிதில் எவரும் காண இயலாத  காவல் உடையதாலும்);
வலியின்  வேலொடு வாள்வில் பயிற்றலின்-  வலிமை  மிக்க  வேல்
முதலிய  படைக்கலப்பயிற்சி உடைமையாலும்  (வீரர்கள் வேல் முதலிய
படைக்  கலங்களைப்  பயில்வதாலும்); வெய்ய சூழ்ச்சியின் - கொடிய
தந்திரம்  கொண்டிருப்பதாலும்;  வெலற்கருவலத்தின்-  மற்றவர்களால்
வெல்ல  இயலாத  வல்லமை  உடையதாலும்;  சால்புடை  உயர்வின்-
சிறப்பு  மிக்க  உயர்வுடைமையாலும்;  சக்கரம் நடத்தும் தன்மையின்-
ஆணை  செலுத்தும்  தன்மையாலும்;  தலைவர் ஒத்து உளது- அந்த
மதில் (சூரிய குலத்) தலைவர்களை ஒத்து இருக்கிறது.

சூரிய    குலத்துத் தலைவர்களுக்கும், மதிலுக்கும் சிலேடை மூலமாக
உவமை  கூறியிருப்பதால்  சிலேடை  உவமையணியாகும்.    சால்புடை
உயர்வு: உயரத்துக்கு இடமில்லை என்னும்படி உயர்தல்.   மனுநூல் நெறி
நடத்தல்   மன்னருக்குரியது.  ‘மனு’  என்ற  சிற்ப  நூல்    வல்லாரின்
நெறிப்படி  அமைதல் மதிலுக்கு உரியது. வெய்ய சூழ்ச்சி:   வெளியோர்
எளிதில்     நுழைய     இயலாத     வாயில்     முதலியவைகளைக்
கொண்டிருப்பதாகும்.                                         11