தைலம் ஆட்டு படலம் - 2014
மீண்டுவந்து வருந்திய மக்களை வசிட்டமுனிவன் தேற்றுதல்
2014.
மன்னற்கு அல்லார்; வனம் போன
மைந்தற்கு அல்லார், வாங்க அரிய
இன்னற் சிறையின் இடைப்பட்டார்,
இருந்தார்; நின்ற அருந் தவனும்
‘உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி
அன்றோ ஒழிந்தது யான்?’ என்று,
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து,
பதைப்பை நீக்கினான்.
(மீண்ட நகரினர்),மன்னற்கு அல்லார் - (நகரில் இருந்து)
இறந்துபோனதயரதனுக்கும் உதவாமல்; வனம் போன மைந்தற்கு
அல்லார் - காடு சென்ற இராமனுடன் கூடச்சென்று அவனுக்கும்
உதவாமல்; வாங்க அரிய - நீக்க முடியாத; இன்னல் சிறையின்
இடைப்பட்டார் - துன்பமாகிய சிறையிலே அகப்பட்டுத் தவிப்பாராய்;
இருந்தார் -; நின்ற அருந்தவனும் - அவர்களிடையேஇருந்த
வசிட்டனும்; ‘யான் -; உன்னற்கு அரியபழிக்கு அஞ்சிஅன்றோ
ஒழிந்தது என்று - நினைத்தற்கும் அரிய பழி வந்து சேரும் என்றுகருதி
அல்லவா நகரில் தங்கியது என்று கூறி; பன்னற்கு அரியபல நெறியும்
பகர்ந்து-சொல்லுதற்கு முடியாத பல சமாதானங்களையும் சொல்லி;
பதைப்பை நீக்கினான் -அவர்கள் துடிப்பைப்போக்கினான்.
‘நகரில் தங்கியது’ என்றும், ‘வனம் போகாது ஒழிந்தது’என்றும்,
‘இராமன் காடு செல்வதைத் தடுக்காமல் ஒழிந்தது’ என்றும் பலவாறு பொருள்
கொள்ளக்கிடக்கும் எதைச் செய்தாலும் பழியாகும் ஆதலின் அவை
அனைத்தும் பொருந்திய உரைகளே. 85
