தைலம் ஆட்டு படலம் - 2010
விழித்தழெுந்த மாந்தர் தேர்ச்சுவடு நோக்கி அயோத்திக்கு
மீளுதல் (2010-2012)
தேர்ச்சுவடு நகரம் நோக்கிச் செல்வது கண்டு மக்கள் மகிழ்தல்
2010.
தேரின் சுவடு நோக்குவார்;
திரு மா நகரின் மிசைத் திரிய
ஊரும் திகிரிக் குறி ஒற்றி
உணர்ந்தார்; எல்லாம் உயிர் வந்தார்;
‘ஆரும் அஞ்சல்; ஐயன் போய்
அயோத்தி அடைந்தான்’ என, அசனிக்
காரும், கடலும், ஒருவழிக் கொண்டு
ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார்.
எல்லாம் - எல்லாரும்; தேரின் சுவடு நோக்குவார் - தேரின்
சக்கரத்தழும்பைப் பூமியில் பார்த்து; திருமாநகரின் மிசைத் திரிய ஊரும்
திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார் - அழகிய பெரிய அயோத்தி நகரின்
மேல் திரும்பச் சுழன்று செல்லும் சக்கரஅடையாளத்தைப் பொருத்திச்
சார்ந்து அறிந்து; உயிர் வந்தார் - உயிர் வரப்பெற்று; ‘ஆரும் அஞ்சல்-
யாரும் பயப்படாதீர்கள்; ஐயன் அயோத்தி போய்அடைந்தான்’ -
இராமன் அயோத்திக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான்;’ என -என்று; அசனிக்
காரும் - இடி உடைய மேகமும்; கடலும் -; ஒரு வழிக் கொண்டு -
ஓரிடத்தில் சேர்ந்து; ஆர்த்த என்ன - ஒலி்த்தன என்னும்படி; கடிது -
விரைவாக; ஆர்த்தார் - மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்.
ஆர்ப்புக்கு மேகமும் கடலும் சேர்ந்த ஒலி உவமை. சுமந்திரன்சென்ற
தேர்ச் சுவட்டை இராமன் திரும்பச் சென்றதாகக் கருதி மயங்கினர். 81
