தைலம் ஆட்டு படலம் - 1995
கைகேயியை நோக்கிக் கூறுதல்
1995.
‘வடித் தாழ் கூந்தற் கேகயன்
மாதே! மதியாலே
பிடித்தாய் வையம்; பெற்றனை
பேரா வரம்; இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம்?’
என்றாள் - முகில்வாய் மின்
துடித்தாலென்ன, மன்னவன்
மார்பில் துவள்கின்றாள்.
முகில் வாய் - மேகத்திடத்து; மின் துடித்தால் என்ன - மின்னல்
துடித்தது போல; மன்னவன் மார்பில்- தசரதன் மார்பில்; துவள்கின்றாள்-
துயரதத்தால் துவளும் கோசலை; ‘வடித்தாழ் கூந்தல் கேகயன் மாதே! -
கை செய்துஅழகுற்றுத் தொங்கி நீண்ட கூந்தலையுடைய கைகேயியே! -
மதியாலே - உன்புத்திவல்லமையால்; வையம் பிடித்தாய்- அரசாட்சியைப்
பிடித்துக் கொண்டாய்; பேராவரம் பெற்றனை - மாறுபட முடியாத
வரத்தைப் பெற்றாய்; இன்னே - இப்போதே; மந்திரம் முடித்தாய்
அன்றே’ - உன் ஆலோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா;
என்றாள்-
வடித்தல் - வாரிச் சீவி ஒழுங்குறுத்தல். நினைத்த காரியத்தை
அவ்வண்ணமே. அப்பொழுதேநிறைவேற்றிக்கொண்ட கைகேயியின் புத்தி
வன்மையைக் கூறி அவலிக்கிறாள் கோசலை. முகில்வாய் மின் - தசரதன்
மார்பில் விழுந்து புரளும் கோசலை. தசரதனை இங்கே முகில் என்றபடியால்
அவனும் இராமன் போன்று கார் மேனியன் ஆதல் வேண்டும் என
அறியலாம். 66
