தைலம் ஆட்டு படலம் - 1971
இலக்குவன் கூறுதல் (1971-1973)
இலக்குவன் சொன்ன செய்தி
1971.
‘உரைசெய்து எம் கோமகற்கு
உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத்
தவிர, மற்று ஒரு
விரை செறி குழலிமாட்டு
அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று
அறையற் பாலதோ?
‘எம் கோமற்கு - எம் தலைவனாகிய இராமனுக்கு; உரை செய்து -
இவ்வரசுஉனக்கு உரியது என்று சொல்லி; உறுதி ஆக்கிய - அரசவையில்
பலர் முன்னிலையில் உறுதிப்படுத்திய; தரை கெழு செல்வத்தை - கோசல
நாட்டொடு பொருந்திய அரசாட்சிச்செல்வத்தை; தவிர - இராமன்
ஆளாமல் தவிரும்படி; மற்று ஒரு - வேறாகிய ஒரு; விரை செறி குழலி
மாட்டு - மணம் பொருந்திய கூத்தலை உடைய கைகேயியிடம்; அளி்த்த -
கொடுத்துவிட்ட; மெய்யனை - சத்திய வாக்கினனாய தயரதனை; அரைசன்
என்று - அரசன் என்று; இன்னமும் அறையற்பாலதோ?’ - இனியும்
சொல்லுதல் தகுதியுடையது ஆகுமோ.’
அரசவையில் உறுதிசெய்ததை அந்தப்புரத்தில் மாற்றியவன் சத்திய
சந்தனா, அரசனாஎன்று வெகுட்சியாகக் கேட்கிறான் இலக்குவன்,
‘மெய்யனை’ என்பது இகழ்ந்துரைத்த வார்த்தை.‘அவன் அரசனாதற்குத்
தகுதியுடையவன் அல்லன்; அவனுக்கென்ன நான் செய்தி சொல்லியனுப்புவது’
என்கின்ற சினவெறுப்புப் புலனாதல் காண்க. 42
