தைலம் ஆட்டு படலம் - 1968
சீதை சொல்லல்
1968.
அன்னவள் கூறுவாள்,
‘அரசர்க்கு, அத்தையர்க்கு,
என்னுடைய வணக்கம் முன்
இயம்பி, யானுடைப்
பொன் நிறப் பூவையும்,
கிளியும், போற்றுக என்று
உன்னும் என் தங்கையர்க்கு
உணர்த்துவாய்’ என்றாள்.
அன்னவள் - சிதை; கூறுவாள் - (சுமந்திரனிடம் செய்தி)
சொல்லுவாளாகி;‘அரசர்க்கு, அத்தையர்க்கு - தசரதரிடத்தும்
மாமியாரிடத்தும்; என்னுடை வணக்கம்முன் இயம்பி - எனது
வணக்கத்தை முதலிற் சொல்லி (பிறகு); யான் உடை -என்னுடைய;
பொன் நிறப் பூவையும் - பொன்னிறமான நாகணவாய்ப் புள்ளையும்;
கிளியும் - கிளியையும்; போற்றுக - பாதுகாக்க; என்று -; உன்னும் -
என்னை நினைக்கின்ற; என் தங்கையர்க்கு - என் சகோதரிகளிடம்;
உணர்த்துவாய்’ -சொல்லுவாய்;’ என்றாள் -.
சீதையின் பேதைமைத் தன்மையை இவ் வார்த்தைகள் விளக்கி நின்று
இத்தகைய குழந்தைத்தன்மையுடையாள் பின் வனம் புகுந்து எவ்வளவு
உயர்ந்த மனவளர்ச்சியும் குண வளர்ச்சியும்பெற்றுத் திகழ்கிறாள் என்பதை
அறிந்துகொள்ள உதவுகிறது. தங்கையர் - ஊர்மிளை, மாண்டவி, சுருத
கீர்த்தி ஆகியோர் - இவர் ஜனகன் புதல்வியர். இலக்குவன், பரதன்,
சத்துருக்கனன் மனைவியளர் ஆவர். 39
