தைலம் ஆட்டு படலம் - 1966
1966.
‘முறைமையால் எற் பயந்
தெடுத்த மூவர்க்கும்
குறைவு இலா என் நெடு
வணக்கம் கூறி, பின்
இறைமகன் துயர் துடைத்து
இருத்தி, மாடு’ என்றான் -
மறைகளை மறைந்து போய்
வனத்துள் வைகுவான்.
மறைகளைமறைந்து போய் - வேதங்களுக்கு எட்டாமல் மறைந்து
நின்று; வனத்துள் வைகுவான் - எடுத்த அவதாரத்திற்கேற்பவனத்தின்கண்
வசிப்பவனாகிய இராமன்; என் பயந்து எடுத்த மூவர்க்கும்- என்னைப்
பெற்றெடுத்த தாயர்; மூவர்க்கும் -மூன்றுபேர்க்கும்; முறைமையால் -
முறைமைப்படி; குறைவு இலா -சிறிதும் குறைவுபடாத;என் நெடு
வணக்கம் கூறி - என்னுடைய பெரிய வணக்கத்தைச் சொல்லி; பின்-
பிறகு; இறை மகன் துயர் துடைத்து - தயரதனதுதுன்பத்தை நீக்கி;
மாடு- அவன் பக்கல்; இருத்தி’- நீங்காது இருப்பாயாக; என்றான் -.
அன்னையர்க்குச் சொல்ல வேண்டியதைச் சுமந்திரன்பால் கூறினன்.
‘வேதம்.......தெரிகிலாஆதி தேவர்’ (2516). இப்படலத்து26 ஆம் பாடலால்
‘தூய மெய்யுணர்வால் அணுகும் காட்சியான்’என்று சொல்லி, இங்கே
‘மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான்’ என்று முடித்துள்ள
அருமைப்பாட்டை அறிந்து நுகர்க. 37
