தைலம் ஆட்டு படலம் - 1963
1963.
‘ “வெவ்வியது, அன்னையால்
விளைந்தது, ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன்
கருத்தின் நோக்கலன்,
எவ் அருள் என்வயின்
வைத்தது, இன் சொலால்,
அவ் அருள் அவன்வயின்
அருளுக!” என்றியால்.
‘ஈண்டு - இவ்விடத்து; அன்னையால் விளைந்தது - கைகேயியால்
உண்டாக்கியது; வெவ்வியது ஒரு கவ்வை - கொடியதாகிய ஒரு துன்பம்;
என்று-; இறையும் - சிறிதளவும்; தன் கருத்தின் - (பரதன்) தன்னுடைய
மனத்தின்கண்; நோக்கலன் - கருதாதவனாய்; எவ் அருள் என் வயின்
வைத்தது- எத்தகையதொரு அருளைஎன்னிடம் (பரதன்) வைத்துள்ளானோ;
அவ் அருள் - அத்தகைய அருளை; அவன் வயின் -அந்தத் தயரத
மன்னனிடத்தும்; அருளுக’ - காட்டுவானாக; என்றி - என்று
சொல்லுவாய்.’
கைகேயிமாட்டும், தயரதன்மாட்டும் என்னிடம் உள்ள அன்பிற்சிறிதும்
குறையாது அன்போடு நடந்துகொள்ளுமாறு பரதன்பால் கூறவும் என்றான்.
“ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், தாய் எனும் பெயர்
எனைத் தடுக்கற்பாலதோ” என்று பரதன் கூறுவதைஇங்கே கருதுக.
(2173.) 34
