தைலம் ஆட்டு படலம் - 1944
1944.
தகவும் மிகு தவமும் இவை
தழுவ, உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும்
நுகர்கிலர்கள், துயர் முடுக,
அகவும் இள மயில்கள்,
உயிர் அலசியன அனையார்,
மகவு முலை வருட,
இள மகளிர்கள் துயின்றார்.
இள மகளிர்கள் - இளைய பெண்கள்; தகவும் - நற்குணமும்; மிகு
தவமும்- சிறந்த தவமும் (கொண்டானைத் தெய்வம் எனக் கொள்ளுதலும்
அவன் குறிப்பின் வழிஒழுகலும்); இவை தழுவ - இவை பொருந்தி
இருப்ப; உயர் கொழுநர் முகமும் அவர்அருளும் - உயர்ந்த கணவரது
முகத்தையும் அவர் கருணையையும்; நுகர்கிலர்கள்-அனுபவியாதவர்களாய்;
துயர் முடுக - துன்பம் விரைந்து செலுத்த; அகவும் இளமயில்கள் -
ஆடுகின்ற இள மயில்கள்; உயிர் அலசியன அனையார் - உயிர்
ஒடுங்கிப் போன தன்மையை ஒத்து; மகவு முலை வருட - குழந்தை
முலையை நெருடிக்கொண்டிருக்க; துயின்றார் - தூங்கினார்கள்.
பால் உண்ண முலையில் பால் இல்லாமையால் குழந்தை முலை
வருடுகிறது எனினும் அமையும். உண்டபின்னும், உண்ணும் போதும்
குழந்தை முலை வருடல் இயல்பு. 15
