தீவளர்த்திடுவோம்!

தீவளர்த்திடுவோம்!

bookmark

யாகப் பாட்டு 
ராகம் - புன்னாகவராளி 

பல்லவி 

தீ வளர்த்திடுவோம்! - பெருந் 
தீ வளர்த்திடுவோம்! 

சரணங்கள் 

ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும் 
  அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின் 
ஆசை வளர்த்திடுவோம் - களி 
  ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு 
தேவி மகனைத் திறமைக் கடவுளைச் 
  செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத் 
தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள் 
  சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ) 

சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத் 
  தீமை யழிப்பவனை - நன்மை 
சேர்த்துக் கொடுப்பவனை - பல 
  சீர்க ளுடையவனைப் - புவி 
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும் 
  ஆரியர் நாயகனை - உருத்திரன் 
அன்புத் திருமகனை - பெருந்திர 
  ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ) 

கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங் 
  கண்மணி போன்றவனை - எம்மைக் 
காவல் புரிபவனைத் - தொல்லைக் 
  காட்டை யழிப்பவனைத் - திசை 
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள் 
  யாவும் பழகிடவே - புவிமிசை 
இன்பம் பெருகிடவே - பெருந்திரள் 
  எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ) 

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும் 
  நீக்கிக் கொடுப்பவனை - உயிர் 
நீளத் தருபவனை - ஒளிர் 
  நேர்மைப் பெருங்கனலை - நித்தம் 
அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல் 
  ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள் 
ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள் 
  ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ) 

அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி 
  அழித்திடும் வானவனைச் - செய்கை 
ஆற்றுமதிச் சுடரைத் - தடை 
  யற்ற பெருந்திறலை - எம்முள் 
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் 
  ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி 
ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள் 
  எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ) 

வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று 
  மண்டி யெழுந்தழலைக் - கவி 
வாணர்க்கு நல்லமுதைத் - தொழில் 
  வண்ணந் தெரிந்தவனை - நல்ல 
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் 
  தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு 
தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள் 
  சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ) 

சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள் 
  தேவத் திருமகளிர் - இன்பத் 
தேக்கிடுந் தேனிசைகள் - சுவை 
  தேறிடு நல்லிளமை - நல்ல 
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த 
  முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர 
முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள் 
  மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)