திரு அவதாரப் படலம் - 316
தசரதனுடைய பெருமகிழ்ச்சி
316.
அரசர்தம் பெருமகன். அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க. வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட. முனிவர் ஏத்துற.
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள்.
அரசர் தம் பெருமகன்-மன்னர் மன்னனாகிய தயரதன்; அகிலம்
யாவையும் விரசுறு - உலகம் முழுதும் தன் நிழலில் வந்து
சேர்வதாகிய; தனிக்குடை விளங்க - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை
விளங்கவும்; வெற்றி சேர் முரசு ஒலிகறங்கிட-வெற்றி மிகுந்த முரசின்
ஒலி திரிந்து ஒலிக்கவும்; முனிவர் ஏத்துற -முனிவர்கள் எல்லாம்
புகழவும்; கரைசெயல் அரியது - அளவிடற்கு அரிதாகிய; ஓர்
களிப்பில் வைகும் நாள் - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாக
வாழ்ந்திருந்த காலத்திலே.
இந்தப் பாட்டு சில பிரதிகளில் திரு அவதாரப் படலத்தின் இறுதிப்
பாடலாக அமைந்துள்ளது. கையடைப் படலத்தின் தோற்றுவாயாகக்
கூறப்படுவதாகும். அரசர்தம் பெருமகன்: சக்கரவர்த்தி. ‘அகிலம்’
பரந்த என்னும் பொருளில் உலகைக் குறித்து நின்றது. சேர்தல். கரை.
வரம்பு (அளவு) கரை என்னும் குறிப்பால் ‘களிப்பு’ கடல் என்னும்
பொருளை ஏற்றது. ‘நாள்’ காலத்தை உணர்த்தும். ‘எய்தினான்’ என்ற
அடுத்த பாட்டோடு முடியும். மகிழ்ச்சியுடன் தயரதன் வாழ்தலைக்
கூறியதாகும். 1
