திரு அவதாரப் படலம் - 308

bookmark

இராமனும் இலக்குவனும்

308.

ஐயனும் இளவலும். அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிவர. நதியும்.
மை தவழ் பொழில்களும். வாவியும். மருவி.
‘நெய் குழல் உறும் இழை’ என நிலைதிரிவார்.
 
ஐயனும்   இளவலும்-  ராம பிரானும். தம்பியாகிய   இலக்குவனும்;
அணிநில   மகள்தன்   -   அழகிய  நிலமகளுக்குரிய;  செய்தவம்
உடைமைகள்   தெரிதர   -  செய்த   தவப்பயனாய்ப்   பெற்றுள்ள
செல்வங்களைத்  தெரிந்து கொள்ள; நதியும். மைதவழ் பொழில்களும்
வாவியும்    மருவி    -   ஆறுகளையும்.    மேகங்கள்   தவழும்
சோலைகளையும்.   பொய்கைளையும்  அடைந்து;  நெய்குழல்  உறும்
இழை என - நெசவுக் குழலும்.  அதனோடு  பொருந்திய  நூலியையும்
போன்று; நிலை திரிவார் - நிலையிலே திரிவார்கள்.

நிலை     திரிதல்:  ஒரு   நிலையிலிருந்து  மற்றொரு  நிலைக்குச்
செல்லுதலுமாம்.   நிலமகள்   செய்தவத்தையும்.  அதனால்  அடைந்த
பொருட்  பேற்றையும்  தெரிய   விரும்புவார்  போல.  ஆறு. சோலை.
குளம்  ஆகிய  எல்லா இடங்களிலும்  ராமனும்  இலக்குவனும் சேர்ந்து
திரிந்தனர் என்பது கருத்து. இராமனும்  இலக்குவனும்  இணைபிரியாமை
கூறப்பட்டது.                                             127