திரு அவதாரப் படலம் - 303

bookmark

தசரதனுக்கு இராமனிடத்து அன்பு

303.

‘காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே’
ஓவிய எழிலுடை ஒருவனை அலது. ஓர்
ஆவியும் உடலமும் இலது’ என. அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன்.
 
காவியும்  ஒளிர்தரு  கமலமும் எனவே - நீலோற்பல மலரையும்
இடையே  ஒளிரும்  தாமரைகளும்  எனுமாறு;  ஓவிய  எழில்  உடை
ஒருவனை  -  ஓவியம்  போன்ற  அழகுடைய  ஒப்பற்ற ஒருவனாகிய
ராமனை; அலதோர் ஆவியும்  உடலுமு் இலதென - அல்லது. வேறு
உயிரும்.  உடலும்  தனக்கு இல்லை எனும்படி நினைத்து; உலகுடைய
வேந்தர்தம்  வேந்தன் - உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆளும்
மன்னர்   மன்னனான  தயரதன்;  அருளின்  மேவினன்  -  அருள்
உடையவனாய் வாழ்ந்திருந்தான்.

‘காவி’     ராமனது மேனியின் நிறத்தும். ‘கமலம்’ முகம். கண். கை
போன்ற   பிற   உறுப்புகளுக்கும்   உவமையாயிற்று.  ஓவிய  எழில்:
சித்திரத்தில்   எழுதி   வைக்கப்பட்டது  போன்ற  அழகு.  ஒருவன்:
ஒப்பற்றவன்.   ஆவியும்   உடலும்   என்பதனை   உலகுக்கு  ஏற்றி
உரைத்தலும் பொருந்தும்.

உலகாளும்     மன்னனான தயரதன்  புதல்வர்  நால்வரில்  மூத்த
குமாரரான   ராமபிரானிடத்தில்  மிகுந்த   அன்புடையவனாயிருந்தான்
என்பது கருத்து. அருளின் மேவினன்:பேரன்புடையவனாயிருந்தான்.  122