திரு அவதாரப் படலம் - 298
இராமன் எனப் பெயரிடுதல்
298.
கரா மலை. தளர் கைக் கரி எய்த்தே.
‘அரா-அணையில் துயில்வோய்!’ என. அந் நாள்.
விராவி. அளித்தருள் மெய்ப்பொருளுக்கே.
‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே.
கரா மலைய-ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர்
கைக்கரி - அதனால் சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான
கஜேந்திரன்; அரா அணையில் துயில்வோய் என - பாம்பணையில்
துயில்பவனே என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள் -அந்த
நாளிலே விரைந்து அந்த முதலையை அழித்து யானையைக்
காத்தருளிய; மெய்ப்பொருளுக்கு - உண்மைப் பொருளான
அப்பரமனுக்கு; ‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனர் - இராமன் என்னும்
பெயரை (வசிட்டன்) சூட்டினான்.
கரா: முதலை. தளர் கரி: வினைத்தொகை. எய்த்தல்:
இளைத்தலுமாம். அராஅணை: அரவணை (பாம்புப் படுக்கை). விராவி:
சேர்தலுமாம். அராஅணைத் துயில்வோய் என விளித்து தான்
பன்னாள் துன்புறவும் அது பற்றிக் கவலை உறாமல் உறங்குகின்றாயே
பெருமானே என்ற குறிப்புடையது. மெய்ப்பொருள்: உண்மைப்
பொருளாகிய பரமன். ராமன்: அழகன். அன்றே: அசை. 117
