திரு அவதாரப் படலம் - 297
297.
இத்தகை மா நகர். ஈர் - அற நாளும்
சித்தம் உறும் களியொடு சிறந்தே.
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.
இத்தகைய மாநகர்- இந்த விதமாக அயோத்தி நகர மக்கள்; ஈர்
அறு நாளும் - அந்தப் பன்னிரண்டு நாட்களும்; சித்தம் உறும்
களியொடு சிறந்து - மனம் பொருந்திய மகிழ்ச்சியால் சிறந்து;
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் - தங்கள் தங்களையே ஒன்றும்
உணராதவர் ஆயினர்; தாவா மெய்த்தவன் - குறையாத தவத்தை
உடைய வசிட்ட முனிவன்; நாமம் விதிப்ப மதித்தான் - அக்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட எண்ணினாள்.
தகை: தன்மை. மா: அழகு; பெருமையுமாம். அரச குலத்தவருக்குப்
பிறந்த பன்னிரண்டு நாட்கள் கழிந்த பிறகே பெயர் சூட்டுதல்
விதியாதலின் ‘’ஈர் அறு நாள்’’ என்றார். ‘’பத்தும் கடந்த இரண்டாம்
நாள்’’ என்பர் பெரியாழ்வாரும். உறு: மிகுதி. சித்தம்: மனம். களி:
களித்தல். தத்தமை: தங்கள் தங்களை. மாநகர் எழுவாய்; உணர்ந்திலர்
பயனிலை. அந்நகரத்தார் உணர்ந்திலர் என்பது பொருள். நாமம்
விதித்தல்: பெயர் சூட்டுதல்.
பிள்ளைகள் பிறந்த பன்னிரண்டு நாட்களும் அளவற்ற
மகிழ்ச்சியால் அந்நகர மக்கள் தங்களையே மறந்து மகிழ்ச்சியில்
திளைத்தனர். பன்னிரண்டுநாட்கள் கழிந்த பின்னர் வசிட்டர்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டக் கருதினார் என்பதுகருத்து. 116
