திரு அவதாரப் படலம் - 291
291
‘படை ஒழிந்திடுக; தம் பதிகளே. இனி.
விடை பெறுக. முடி வேந்தர்: வேதியர்.
நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழாவொடு பொலிக. எங்கணும்.
முடிவேந்தர் படை ஒழிந்திடுக- நம்மால் சிறை வைக்கப்பட்ட
அரசர்கள் எல்லோரும் தம்மைச் சிறைகாக்கும் படைகளிலிருந்து
நீங்கட்டும்; இனி தம் பதிகளே விடைபெறுக - இனிமேல் தங்கள்
நகரங்களுக்குச் செல்ல விடுதலை பெறட்டும்; வேதியர் நடைஉறு
நியமமும் நவை இன்று ஆகுக - வேதம் ஓதுதலில் வல்லவரான
வேதியர்கள் தமது ஒழுக்க நியமங்களில் குற்றம் நீங்க
நடைபெறட்டும்; புடைகெழுவிழாவொடு பொலிக எங்கணும் -
(கோயில்கள்) எங்கும் விழாக் கோலம் பொலியட்டும்.
படை: சேனை (சிறைகாக்கும் படை). நியமம். விரத ஒழுக்கம்.
நடைஉறு: நடைபெற்று வரும். புடை: பக்கம். விழாவொடு பொலிக
என்றதால் கோயில்கள் எங்கும் விழாக்கள் பொலியட்டும் என்று உரை
கூறப்பட்டது. சிறைப்பட்ட மன்னர்களைக் காக்கும் படைகளின் காவல்
ஒழிக. அம்மன்னர்கள் தங்கள் பதிகளுக்கே விடுதலை பெறுக.
வேதியர் தம் விரத ஒழுக்கம் குறையின்றி நடைபெறுக. எங்கும்
விழாக்கோலம் பொலிக என்பது கருத்து. விடை பெறு: விடுதலை
பெறுவார்களாக என்பது பொருள். 111
